< Back
வானிலை
16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்.. - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
வானிலை

"16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்.." - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

தினத்தந்தி
|
14 Oct 2024 5:00 PM IST

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (16ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை கோடப்பாக்கத்தில் நேற்று 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மீனவர்கள் இன்று முதல் 16-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பாலச்சந்திரன் கூறினார்.

மேலும் செய்திகள்