அந்தமான் பகுதியில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
|தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சி நாளை மறுநாள் (23-ம் தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இரண்டு நாட்களில் வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. மேலும் வங்கக்கடலில் நாளை மறுநாள் (நவ.23ம் தேதி) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் நவ.25-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நவ.26-ம் தேதி தமிழ்நாட்டில் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.