< Back
வானிலை
நாளை மறுநாள் கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வானிலை

நாளை மறுநாள் கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தினத்தந்தி
|
15 Oct 2024 6:23 PM IST

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17-ம் தேதி கரையை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 17-ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வடக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்