வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... டெல்டா மாவட்டங்களில் அதிகரிக்கும் கனமழை
|தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 630 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நாளை அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.