< Back
வானிலை
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
வானிலை

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தினத்தந்தி
|
21 Oct 2024 9:08 AM IST

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது.

அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை கிடைத்தது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வரும் போது மேலும் மழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது பொய்த்து போனது.

இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் (புதன்கிழமை) புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போது வரையிலான தகவலாக இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலுக்கு பெயர் 'டானா'

பருவமழை காலங்களில் புயல் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் புயல்களை அடையாளப்படுத்தும் விதமாக அதற்கு பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளாக வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் உள்ளன.

இந்த நாடுகள் வட இந்திய பெருங்கடல், அரபிக்கடலில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டும் வகையில், ஒவ்வொரு நாடும் 13 பெயர் வீதம் தலா 169 பெயர்களை தேர்வு செய்து அளிக்கும். அதில் உள்ள வரிசைப்படி புயலுக்கு பெயர் சூட்டப்படுகின்றன.

அதன்படி, தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட இருக்கிறது. இது கத்தார் நாடு வழங்கிய பெயர் ஆகும். டானா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'விலைமதிப்பற்ற அல்லது அழகான முத்து' என்று அர்த்தம்.

மேலும் செய்திகள்