< Back
தலையங்கம்
என்று தணியும் இந்த சாதி வெறி?
தலையங்கம்

என்று தணியும் இந்த சாதி வெறி?

தினத்தந்தி
|
11 Jan 2025 6:32 AM IST

தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களும் சாதி வேறுபாடு இல்லாமல் மக்கள் வாழவேண்டிய அவசியம் குறித்து பல நல்லுரைகளை வழங்கி சென்றிருக்கிறார்கள்.

'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி' என்பது தமிழர்களுக்கு பண்டைய காலத்திலேயே அவ்வை பிராட்டியார் வழங்கிய முதுமொழியாகும். இதுபோல தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களும் சாதி வேறுபாடு இல்லாமல் மக்கள் வாழவேண்டிய அவசியம் குறித்து பல நல்லுரைகளை வழங்கி சென்றிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் குறித்து கருணாநிதி கவலை தெரிவிக்கும்போது, 'புலியும், மானும் ஒரே குளத்தில் தண்ணீர் குடிக்க முடியாமல் சண்டையிட்டால்கூட தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் மானும், மானும் சண்டை போடுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப்பட பாடலில் 'ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே' என்று பாடுவார். இதேபோல நமது மூதாதையர்களும், தலைவர்களும் சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று போதித்து சென்றாலும், தமிழ்நாட்டில் இப்போதும் பல இடங்களில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகின்றன. வேறு சாதியில் தங்கள் மகளோ, மகனோ திருமணம் செய்துகொள்வதை தாங்கிக்கொள்ளமுடியாமல் பல ஆணவ கொலைகள் நடந்துவருகின்றன. திருமணத்துக்கு இருமனங்கள் மட்டும்தான் இணையவேண்டுமே தவிர, இரு சாதிகள் ஒத்துப்போகவேண்டிய தேவை இல்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகரின் தென்பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வந்தாலும், குறிப்பிட்ட 3 சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த 3 சமுதாய மக்களும் உழைக்கும் சமுதாய மக்கள் என்றாலும், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் காலங்காலமாக நடந்துவருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் சாதி ரீதியான படுகொலைகள் அதிகளவில் நடந்துள்ளன. நெல்லைக்கே பெருமைதரும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சனா முதலியார் பாலம் கட்டுவதற்கே இந்த சாதிய படுகொலைதான் மூல காரணமாக இருந்திருக்கிறது. இப்போது சாதி மோதல்கள் மாணவர்கள் மத்தியிலும், அதுவும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் துளிர்விட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த பிஞ்சு வயதில் உள்ள பருவத்தில் மாணவர்கள் தங்கள் சாதியை பறைசாற்றும் வகையில் கைகளில் பட்டைகள், கயிறுகளை கட்டிக்கொள்வதால்தான் எளிதில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படிக்கும் மாணவன் தனது புத்தகப்பையிலேயே கத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அதுபோல சமீபத்தில் கோர்ட்டு வாசலிலேயே ஒரு சமுதாயத்தை சேர்ந்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அந்த 2 சாதிகளுக்கு இடையே பழிக்குப்பழியாக சங்கிலி தொடர் கொலைகள் நடந்துவருகின்றன.

100 வயதை எட்டியிருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு 60 ஆண்டுகளுக்கு முன்பு இரு சாதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டபோது அந்த சாதிகளின் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மோதலை தணித்தார். அதுபோல இப்போதும் அனைத்து சாதி தலைவர்களும் நினைத்தால் இந்த சாதி மோதல்களை தணித்துவிடமுடியும். அதை அமைதியை விரும்பும் சாதி தலைவர்கள் செய்யவேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னட கவிஞர் பம்பா கூறியதுபோல, 'நாட்டில் ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அதுதான் மனித சாதி' என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மேலும் செய்திகள்