< Back
தலையங்கம்
148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மாற்றமா?
தலையங்கம்

148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. மாற்றமா?

தினத்தந்தி
|
19 Dec 2024 6:27 AM IST

148 பொருட்களுக்கு வரி சீரமைப்பு செய்யவேண்டும் என்ற பரிந்துரையை மந்திரிகள் குழு அளித்துள்ளது என தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் தங்கள் வருவாயில் இழப்பு ஏற்படும் என்று குற்றம்சாட்டின. இந்த வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற 4 விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் வரி மத்திய - மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதுதவிர, சில பாவப்பொருட்கள் என்று அழைக்கப்படும் புகையிலை பொருட்கள் போன்ற மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் மேல் வரி மற்றும் கூடுதல் வரியை விதித்து வசூலிக்கிறது.

இந்த வரி வசூல் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே போகிறதேயொழிய மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. அவ்வப்போது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி, சில பொருட்களுக்கான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை சீரமைப்பதற்காக கடந்த ஜூலை 2-ந்தேதி, பீகார் மாநில துணை முதல்-மந்திரியான சாம்ராட் சவுத்ரி தலைமையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் கர்நாடகா மாநில நிதி மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அதிகம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் மாநிலம் மட்டுமல்ல, ஜி.எஸ்.டி. பற்றி ஆழ்ந்த அறிவாற்றல் கொண்ட தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை நியமிக்கவில்லையே என்ற குறை தமிழக மக்களுக்கு உண்டு. இந்த மந்திரிகள் குழு 148 பொருட்களுக்கு வரி சீரமைப்பு செய்யவேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் முக்கியமானது, பாவப்பொருட்கள் என்ற பட்டியலிலுள்ள சிகரெட், புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள் உள்பட 46 பொருட்களுக்கு இப்போது விதிக்கப்படும் 28 சதவீத வரியை 35 சதவீதமாக உயர்த்தவும், இதற்கு கூடுதலாக மேல் வரி மற்றும் கூடுதல் வரியையும் விதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இதுபோல, ரூ.1500 வரையுள்ள ரெடிமேட் ஆடைகளுக்கு 5 சதவீதமும், ரூ.1500 முதல் ரூ.10 ஆயிரம் வரையில் 18 சதவீதமும், அதற்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதமும் விதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இதுபோல, ரூ.25 ஆயிரத்துக்கு மேல் உள்ள கைக்கெடிகாரங்களுக்கு இப்போது விதிக்கப்படும் 18 சதவீத வரியை 28 சதவீதமாகவும், ரூ.15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஷூக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. மாநில நிதி மந்திரிகள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் வருகிற 21-ந்தேதி கூடி இந்த பரிந்துரைகளை விவாதித்து முடிவு செய்யப்போகிறது. இவற்றை ஏற்றுக்கொண்டால் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், ரெடிமேட் ஆடைகளுக்கான வரி உயர்வால், இந்தத் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்பதுடன், 1 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்று ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ரூ.22 ஆயிரம் கோடி வரி உயர்வுக்குட்படும் பொருட்கள் பெரும்பாலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்பதால் இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நடுத்தர வர்க்கத்தை பெரிதும் பாதிக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவெடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்