எப்போது தொடங்கப்போகிறது பிரதமரின் பயிற்சியாளர் திட்டம்?
|மத்திய அரசும், மாநில அரசுகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களிலேயே அதிக முனைப்பு காட்டி வருகின்றன.
சென்னை,
மத்திய அரசும், மாநில அரசுகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களிலேயே அதிக முனைப்பு காட்டி வருகின்றன. அரசுகளாலேயே நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து விடமுடியாது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அளப்பரியது. இப்போதுள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஏனெனில் தனியார் நிறுவனங்களில் உழைப்பும், திறமையும் அங்கீகரிக்கப்பட்டு பல பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள், "எங்களிடம் வழங்க வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அந்த வேலைக்கு தகுதியான திறன் படைத்த இளைஞர்கள் கிடைப்பதில்லை'' என்று குறைபட்டுக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் தமிழக அரசு 'நான் முதல்வன்' திட்டத்தை அறிமுகப்படுத்தி பல திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிவருகிறது. இதுபோன்ற திறன்மேம்பாட்டு பயிற்சிகளைப்பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
மத்திய அரசாங்கமும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் பயிற்சியளிக்கும் 'பிரதமரின் இன்டர்ன்ஷிப்' என்ற புதிய திட்டத்தை கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அதாவது, 'பிரதமரின் பயிற்சியாளர்' திட்டம் என்று கூறப்படும் இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு ஆண்டு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்ட திட்டமாகும். இந்த திட்டம் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள வணிக சூழல்களை வெளிப்படுத்தி மதிப்புமிக்க திறன்களையும், பணி அனுபவத்தையும் பெற உதவும்.
இந்த திட்டத்தில் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு படித்தவர்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு மாதந்தோறும் மத்திய அரசாங்கம் ரூ.4,500-ம், பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ரூ.500-ம் உதவித்தொகையாக வழங்கும். ஆக, மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும்.
இதுதவிர ஒருமுறை ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதல் ஆண்டான இந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 280 முன்னணி நிறுவனங்கள் வழங்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளில் சேர 6 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 13,263 பேர்தான். இந்த 280 நிறுவனங்களும் எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மோட்டார் வாகனம், வங்கி மற்றும் நிதி சேவைகள் போன்ற 25 துறைகளின் கீழ் இயங்கும் தொழில்களாகும். இதற்கு கடந்த மாதம் விண்ணப்பம் கோரப்பட்டது.
இந்த திட்டத்தை கடந்த 2-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ அது தொடங்கப்படவில்லை. விண்ணப்பம் செய்த 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலானவர்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், யார்-யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்? என்ற பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதை உடனடியாக அறிவித்து எப்போது முதல் இந்த பயிற்சி தொடங்கும் என்பதையும் அறிவித்தால் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தொடங்க வசதியாக இருக்கும். பயிற்சியில் திறமையைக்காட்டும் இளைஞர்களுக்கு பயிற்சி பெறும் நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த திட்டம் இளைய சமுதாயத்தின் கனவு திட்டமாக இருக்கிறது.