தயார் நிலையில் தமிழ்நாடு!
|அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தயார் நிலையில் உள்ளது.
விவசாயம், குடிநீர் மற்றும் ஏனைய தண்ணீர் தேவைகளுக்கு பருவமழைகளையே தமிழ்நாடு நம்பியிருக்கிறது. தென்மேற்கு பருவமழை இதற்கு ஓரளவு கைகொடுத்தாலும், வடகிழக்கு பருவமழையே முழுமையாக பூர்த்தி செய்கிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் பெய்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 4 சதவீதம் அதிகமாக பெய்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
ஆரம்பமே அமர்க்களம் என்பதுபோல, தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியினால் இன்று முதல் 4 நாட்கள் கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட மிக அதிகமாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் தொடங்கும் முன்பே, 6 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில், ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதுமே பரவலாக அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 24 மணி நேரத்தில் 1 முதல் 6 செ.மீ. வரை பெய்தால் மிதமான மழை என்றும், 7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை பெய்தால் கனமழை என்றும், 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை பெய்தால் மிக கனமழை என்றும், 20 செ.மீ.க்கு மேல் பெய்தால் அதிகனமழை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தயார் நிலையில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூட அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் காணொலியில் அழைத்து, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேற்று முன்தினம் தலைநகர் சென்னையில் ஆய்வு செய்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் உள்ளது. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையரான ராஜேஷ் லக்கானி அங்கேயே இருந்து நிலைமைகளை கண்காணித்து வருகிறார். போலீஸ், தீயணைக்கும் படையினர், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மட்டுமல்லாமல், 13 ஆயிரம் தன்னார்வலர்களும் எந்த நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் முகாமிட்டுள்ளனர். ஆக, எல்லா கோணத்திலும் மழையை எதிர்கொள்ள, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பும் இதில் தேவைப்படுகிறது. 'டி.என். அலர்ட்' என்ற தமிழக அரசின் செயலி மூலமும் மழை பற்றிய விவரங்களை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும்.