50 சதவீத வரி பகிர்வு வேண்டும்!
|ஒரே குடும்பத்தில் பெரிய அண்ணனாக மத்திய அரசாங்கமும், தம்பிகளாக மாநில அரசாங்கங்களும் உள்ளன.
சென்னை,
இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. எல்லாவற்றையும் நிர்வகிக்க மத்திய அரசாங்கம் இருக்கிறது. ஒரே குடும்பத்தில் பெரிய அண்ணனாக மத்திய அரசாங்கமும், தம்பிகளாக மாநில அரசாங்கங்களும் உள்ளன. வரி விதிப்பை பொறுத்தவரை மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் விதிக்கின்றன. மாநிலங்கள்தோறும் மத்திய அரசாங்கம் விதிக்கும் வரி வருவாயை மாநிலங்களுக்கே பகிர்ந்தளிக்கிறது. ஆனால், எதன் அடிப்படையில், எவ்வளவு நிதியை வழங்குவது? என்பதை நிதிக்குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கிறது.
அரசியல் சட்டம் 280-வது பிரிவிலேயே இதுபோல வரி வருவாயை மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் பகிர்ந்துகொள்ள நிதி குழு அமைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிதிக்குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படவேண்டும். தற்போதைய 16-வது நிதிக்குழுவில் அரவிந்த் பனகாரியா தலைவராகவும், 4 உறுப்பினர்களும் உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் நிதிக் குழு 1951-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போதைய 16-வது நிதிக்குழுவை கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைத்தார். இந்த நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்தந்த மாநில அரசுகளின் ஆலோசனைகள், கோரிக்கைகள், கருத்துக்களைப்பெற்று மத்திய அரசாங்கத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்து, 2026 முதல் 2031 வரை மத்திய அரசாங்கம் வசூலிக்கும் வரி வருவாயில் எத்தனை சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று முடிவு செய்து அறிவிக்கப்படும். இப்போது செயல்பாட்டில் உள்ள 15-வது நிதிக்குழு அளித்த பரிந்துரையின்படி, மொத்த வரி வசூலில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வு 4.079 சதவீதம் வழங்கப்பட்டு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெயரளவுக்கு 41 சதவீதம் என்று சொல்லப்பட்டாலும் 33.16 சதவீதம்தான் பகிர்ந்தளிக்கப்படுவதாக சென்னை வந்த 16-வது நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். ஏனென்றால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லாத மேல் வரி மற்றும் கூடுதல் வரியை மத்திய அரசாங்கம் அதிக அளவில் வசூலித்து, தான் மட்டும் அப்படியே முழுமையாக எடுத்துக்கொள்கிறது. இதையும் மொத்த வருவாயில் சேர்த்து மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் சேர்த்துவிடவேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும், "தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை இருப்பதால் இயற்கை பேரிடரை அடிக்கடி சந்திக்கிறது. முதியோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. நகரமயமாக்கல் அதிகமாக இருப்பதால் அதற்குரிய கட்டமைப்பு திட்டங்களுக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இப்போது பகிர்ந்தளிப்பதாக கூறப்படும் 41 சதவீத தொகையை 50 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்று தமிழக அரசு மட்டுமல்லாமல், நிதிக் குழு இதுவரை சென்று வந்துள்ள குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களும், 50 சதவீத நிதி பகிர்வை கேட்டிருக்கிறது. இனி செல்ல இருக்கும் மாநிலங்களிலும் நிச்சயமாக இதே கோரிக்கைதான் வலியுறுத்தப்படும்.
மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், நலத் திட்டங்களையும் நிறைவேற்றுவது அந்தந்த மாநில அரசாங்கங்கள்தான். எனவே, மாநில அரசுகளின் இந்த நியாயமான கோரிக்கையை 16-வது நிதிக்குழுவும் மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரைக்கவேண்டும். 50 சதவீத வரி பகிர்வு என்பதை மத்திய அரசாங்கமும் ஏற்று செயல்படுத்தவேண்டும்.