இது தமிழ்நாட்டின் கோரிக்கை
|சில நாட்களுக்கு முன்பு 55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடந்தது.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இதுவரை 6 வருடாந்திர பட்ஜெட்டுகளையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்து இருக்கிறார். எந்த நிதி மந்திரியும் தாக்கல் செய்யாத அளவுக்கு அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து ஒரு வரலாறு படைத்து உள்ளார். வரும் பிப்ரவரி 1-ந்தேதி 8-வது பட்ஜெட்டையும் தாக்கல் செய்யப்போகிறார். அவரிடம் உள்ள ஒரு பெரிய சிறப்பு ஒவ்வொரு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் முன்பு அந்த பட்ஜெட்டால் தாக்கம் ஏற்படக்கூடிய அனைத்து பிரிவினரையும் அழைத்து அவர்களோடு ஆலோசனை நடத்தி அவர்கள் கோரிக்கைகளையும் கேட்டு, அதன் பின்னரே பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார். இதனால் அவர்களுடைய கோரிக்கைகளும் பட்ஜெட்டில் எதிரொலிக்கும்.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு 55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடந்தது. இதில் கலந்து கொள்ள தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட அனைத்து மாநில நிதி மந்திரிகளும் அங்கு வந்து இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதற்கு முந்தைய நாள் அடுத்த ஆண்டு அவர் தாக்கல் செய்யப்போகும் மத்திய பட்ஜெட்டின் முன்னோட்ட கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில மந்திரிகளிடமும் பட்ஜெட் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்காக இடம் பெறவேண்டிய அறிவிப்புகளுக்காக பல கோரிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். ஒரு நல்ல அரசியல்வாதி என்ற முறையில் முதலில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்ட பணிக்கு ஒப்புதல் அளித்ததற்காக மத்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார். வெறும் ஒப்புதல் மட்டும் போதாது, இந்த திட்டத்துக்காக நிதியும் வேண்டும் என்ற அடிப்படையில், நடப்பு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், அடுத்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடியும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அடுத்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அதாவது, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு விடுவிக்காமல் இருக்கும் ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும், பெஞ்ஜல் புயல் மற்றும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.6,675 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவேண்டும், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தரவேண்டும், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க துணைபுரியும் வகையில் புதிய ரெயில் திட்டங்கள் என்ற வரிசையில் தாம்பரம்-செங்கல்பட்டுக்கு இடையே 4-வது வழித்தடம், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி-ஓசூர் இடையே புதிய ரெயில்பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி ரெயில்பாதை, மீஞ்சூர்-மதுராந்தகம் இடையே ரெயில்பாதை, சென்னை-சேலம்-கோவையை இணைக்கும் மிதவேக ரெயில் பாதை மற்றும் சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்தார். இதெல்லாம் தமிழக மக்களுக்கும் பயன் அளிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்ற வகையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதை பரிசீலித்து மத்திய பட்ஜெட்டில் அதற்குரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.