குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் மறு சிந்தனை
|இந்திய மக்கள்தொகை இப்போது 140 கோடியை தாண்டிவிட்டது.
சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய மக்கள்தொகை இப்போது 140 கோடியை தாண்டிவிட்டது. இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் நீண்ட நெடுங்காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் இந்த திட்டத்தின் முழக்கமாக 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்று கூறப்பட்டது. இப்போது 'நாம் இருவர், நமக்கு ஒருவர்', 'நமக்கு ஏன் இன்னொருவர்?' என்பதே இன்றைய இளைய சமுதாயத்தின் குரலாக இருக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டு இருந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாகவே குடும்ப கட்டுப்பாடு திட்டம் செம்மையாக நிறைவேற்றப்பட்டு வருவதாலும், மக்களிடம் குறைவான குழந்தைகளே நிறைவான வளம் என்ற நினைப்பு அதிகமாக இருப்பதாலும், இப்போது இந்த மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. தமிழ்நாடு உள்பட இந்த மாநிலங்களில் இளைஞர்களை விட முதியோரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.
இதனால் உழைக்கும் கரங்களின் எண்ணிக்கை குறைந்துவருவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக ஊக்கங்களை கொடுப்பதற்கு பதிலாக, மத்திய அரசாங்கத்தின் சில திட்ட பலன்கள் மக்கள் தொகைக்கேற்ப வழங்கப்படுவதால் இந்த தென்மாநிலங்களை விட மக்கள்தொகை அதிகமாக உள்ள வடமாநிலங்களே அதிகம் பலன் பெறுகின்றன. இதுமட்டுமல்லாமல், இப்போது நாடாளுமன்ற தொகுதி வரையறை நடந்துக்கொண்டிருக்கிறது.
2026-ம் ஆண்டுக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். அப்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கும் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இப்போது இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது என்று பேசியுள்ளார்.
இதுபோல அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதிக குழந்தைகளை பெற்றுள்ள குடும்பங்களுக்கு ஊக்கச்சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மக்கள்தொகை பெருக்கம் நாட்டில் 2.1 சதவீதமாக இருக்கும் நிலையில் ஆந்திராவில் 1.6 சதவீதம்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சூசகமாக எதிரொலித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணத்தை நடத்தி வைத்தபோது மணமக்களை 16-ம் பெற்று வளமோடு வாழுங்கள் என்று வாழ்த்தினார்.
16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள் ஆகும். ஆனால் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது நாமும் ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும்?, நாமும் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற குரல் எழுந்துள்ளது. மாநிலங்களில் உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டு இருக்கும்போது உழைக்க வலுவுள்ள இளைஞர் சக்தி மிக, மிக தேவை. அந்தவகையில், இப்போது குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் அனைவருக்கும் புதிய சிந்தனை வந்துள்ளது. இனியும் 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்பது அவசியமா? என்ற உணர்வும் வந்திருக்கிறது.