< Back
தலையங்கம்
Reduction in booking period
தலையங்கம்

முன்பதிவுக்கான காலம் குறைப்பு

தினத்தந்தி
|
2 Nov 2024 6:22 AM IST

பயணம் செய்யும் நாளிலிருந்து 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் கவுண்ட்டர்களிலோ, ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட முடிந்தது.

சென்னை,

ஏழை முதல் பணக்காரன் வரை அனைத்து தரப்பினரும் பயணிக்கும் வகையில் பல்வேறு வகுப்புகளை கொண்டதாக இருக்கும் ரெயில்கள், போக்குவரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. தூங்கும் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பான பயணம் என பல்வேறு அம்சங்கள் ஒருங்கே இருப்பதால், ரெயில் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனால்தான், போக்குவரத்து என்று வரும்போது பயணிகளின் முதல் தேர்வாக ரெயில்கள் இருக்கின்றன.

அதிலும், முன்பதிவு செய்து ரெயில்களில் பயணிக்கும்போது, அது வசதியான பயணமாக, சுகமான பயணமாக பயணிகளால் உணர முடியும். மூட்டை முடிச்சுகளை அதிகம் எடுத்துச் செல்பவர்களுக்கு ரெயில் பயணமே சிறந்தது. 24 பெட்டிகளை கொண்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 2 முதல் 4 எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. மற்றவை, குளுமை வசதி செய்யப்பட்ட முதல் வகுப்பு, 2-வது வகுப்பு, 3-வது வகுப்பு பெட்டிகள் மற்றும் குளுமை வசதியில்லாத படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும் முன்பதிவு செய்து பயணிக்க கூடியவை.

நேற்று முன்தினம் வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக இருந்தது. அதாவது, பயணம் செய்யும் நாளிலிருந்து 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் கவுண்ட்டர்களிலோ, ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட முடிந்தது. இதனால், குறுகிய காலத்தில் திட்டமிட்டு பயணிக்க விரும்புபவர்களுக்கு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சிலர், சரியாக திட்டமிடவில்லை என்றாலும், "எதற்கும் எடுத்து வைப்போம். போகவில்லையென்றால் ரத்து செய்துவிடலாம். குறைந்த அளவு பணத்தை தானே பிடித்துக்கொள்கிறார்கள்" என்று எண்ணி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவது வழக்கமாக இருந்தது. அந்தவகையில், பயண தேதிக்கு முன்பு 61 நாளில் இருந்து 120 நாள் வரை டிக்கெட் முன்பதிவு செய்பவர்களில் 21 சதவீதம் பேர் ரத்து செய்துவிடுவதாக ரெயில்வே நிர்வாகம் புள்ளி விவரம் அளிக்கிறது.

இதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்து ரத்து செய்பவர்களும் அடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு முன்பதிவு செய்து டிக்கெட்டை ரத்து செய்தவர்களால், ரெயில்வே துறைக்கு ரூ.1,229.85 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு 2.4 கோடி பயணிகள், 13 ஆயிரத்து 169 ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாளாக ரெயில்வே வாரியம் குறைத்து, நேற்று நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்து அதன்படி அமலுக்கு வந்துவிட்டது. இது, குறுகிய காலத்தில் திட்டமிட்டு ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் வரவேற்கலாம்.

அதே நேரத்தில், ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலத்தை 120 நாட்கள், 90 நாட்கள், 60 நாட்கள், 45 நாட்கள், 30 நாட்கள் என்று அடிக்கடி மாற்றுவது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். மற்றபடி, காத்திருப்போர் பட்டியலிலுள்ள பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு, குறிப்பிட்ட வழித்தடத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வசதியாக இருக்கும் என்று கூறப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், சிறப்பு ரெயில்களிலும் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கவேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும், முன்பதிவு டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்வதால் ரெயில்வே துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானத்தையும் பயணிகளின் வசதிக்காகவே செலவிடவேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்