< Back
தலையங்கம்
Olympic Games in India?
தலையங்கம்

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி?

தினத்தந்தி
|
7 Jan 2025 6:44 AM IST

இந்தியாவில் 1951, 1982-ம் ஆண்டுகளில் மட்டும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன.

சென்னை,

இந்தியா எல்லா துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. உலக மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருந்தாலும், விளையாட்டுத் துறையில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டால் மட்டுமே தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள். இந்தியாவில் 1951, 1982-ம் ஆண்டுகளில் மட்டும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடந்தது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இருந்தபோதுதான், அவருடைய முயற்சியின் பலனாக சென்னையில் தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. சீனாவில் 1990-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், அவரது முயற்சியால் கபடி சேர்க்கப்பட்டது.

1896 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டாலும், இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை என்ற குறை உள்ளது. கடைசியாக 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடந்து முடிந்தது. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் நடந்தபோது, பிரதமர் நரேந்திரமோடி 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விண்ணப்பம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில், 2036 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான விருப்ப கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் வழங்கியுள்ளது. இதுதான் முதல் முயற்சியாகும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா மட்டும் விருப்பம் தெரிவிக்கவில்லை. மெக்சிகோ, போலந்து, எகிப்து, தென்கொரியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா, சிலி, துருக்கி போன்ற நாடுகளும் முயற்சி செய்கின்றன. இருந்தாலும், இந்தியாவுக்கு இந்த முயற்சியில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால், ஆசியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் 4-வது நாடாக இருக்கும். இதுவரை ஜப்பானில் 2 முறையும், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் தலா ஒருமுறையும் இந்த போட்டி நடந்திருக்கிறது. இந்தியாவில் எந்த நகரத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது? என்பது இன்னும் முடிவாகவில்லை. என்றாலும், ஆமதாபாத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. குஜராத் ஒலிம்பிக் திட்டம் மற்றும் கட்டமைப்பு கழகம் 6 விளையாட்டு வளாகங்களை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நேரத்தில் கட்ட ரூ.6 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருக்கிறது. மேலும், டெல்லி, புவனேசுவரம், சென்னை, பெங்களூரு, புனே, பனாஜி, பஞ்குலா ஆகிய நகரங்களிலும் நடத்த அனுமதி கோரப்படும். 2, 3 நகரங்களிலும் இந்த போட்டியை நடத்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சென்னையிலும் சில போட்டிகளை நடத்த தமிழக அரசு முன்கூட்டியே விண்ணப்பித்து, அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை செய்யவேண்டும். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடந்தால் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும். இதை விளையாட்டுத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகள்