ஆந்திரா, பீகாருக்கு அள்ளி வீசப்படும் புதிய திட்டங்கள்!
|ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மத்திய அரசாங்கம் புதிய.. புதிய.. திட்டங்களை அள்ளி வீசி வருகிறது.
சென்னை,
ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மத்திய அரசாங்கம் புதிய.. புதிய.. திட்டங்களை அள்ளி வீசி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க முடியும் என்ற கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த இக்கட்டான சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து பா.ஜனதாவுக்கு கை கொடுத்தது, ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்தான். தெலுங்குதேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியமைக்கும் நேரத்தில், இந்த இரு கட்சிகளுமே தங்கள் மாநிலங்களுக்கு தேவையான சில கோரிக்கைகளை முன்வைத்தன. பா.ஜனதாவும் ஆட்சியமைத்தவுடன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டை, "இது ஆந்திராவுக்கும், பீகாருக்குமான பட்ஜெட்" என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.
அந்த அளவுக்கு, ஆந்திராவுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பீகாருக்கும் சாலை திட்டங்களுக்கு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி, புதிய விமான நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள் என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த இரு மாநிலங்களுக்கும் புதிய அறிவிப்புகள் என்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்த வாரம் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் புதிதாக என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்படும்? என்று நாடே எதிர்பார்த்தது. தமிழ்நாட்டுக்கு ஏதாவது அறிவிக்கப்படுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திராவுக்கும், பீகாருக்கும் பம்பர் பரிசுகளை அளிப்பது போல 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இரு மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.6,798 கோடி மதிப்பிலான புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பீகாருக்குத்தான் அதிக நிதியாக ரூ.4,543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகாரில் இருந்து நேபாளத்துக்கு உத்தரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைத்து வர்த்தக வழித்தடம் மற்றும் ஆன்மிக வழித்தடம் அமைப்பதற்காக இரட்டை ரெயில் பாதையை உருவாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த பூமியையும், நேபாளத்தில் சீதா தேவி பிறந்த பூமியையும் இணைக்கும் திட்டம் இது என்று ரெயில்வே மந்திரி பெருமைபட கூறியிருக்கிறார். ஆந்திராவைப் பொருத்தமட்டில் ரூ.2,245 கோடி செலவில் அம்மாநில தலைநகரான அமராவதியையும், மற்ற முக்கிய நகரங்களான ஐதராபாத், சென்னை, கொல்கத்தா நகரங்களை இணைக்கும் வகையில் 57 கிலோ மீட்டருக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது.
இந்த ரெயில் பாதையில் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே 3.2 கிலோ மீட்டருக்கு ஒரு புதிய பாலமும் கட்டப்படும். இதன்மூலம் மசூலிப்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களுக்கு இணைப்பு ஏற்படும். இதெல்லாம் சரிதான், அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு எந்த புதிய திட்டமும் இல்லையே என்பதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஒப்புதல் மற்றும் நிதிக்காக பல திட்டங்கள் காத்திருக்கின்றன. நடப்பதை வைத்து பார்க்கும்போது, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளில், ஒரு பிள்ளைக்கு பாலும், தேனும் ஊட்டிவிட்டு, மற்றொரு பிள்ளையை பட்டினி போடுவது போலத்தான் உள்ளது.