நூற்றாண்டு காணும் எளிமையின் அடையாளம்
|இரா.நல்லகண்ணுவுக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை நூற்றாண்டு தொடக்க தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை,
தமிழக அரசியல்வாதிகளில் அதிர்ந்துபேசாத எளிமையின் சின்னமாகவும், அடக்கத்தின் அடையாளமாகவும், கொண்ட கொள்கையில் அழுத்தமான பிடிப்பும் கொண்ட இரா.நல்லகண்ணுவுக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை நூற்றாண்டு தொடக்க தினம் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்தநாளில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், தன் உயிர்மூச்சாக கருதிவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கப்பட்ட 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி தான், நல்லகண்ணுவும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். ஆக கட்சி தொடங்கிய நாளிலேயே பிறந்த ஒரே தலைவர் தோழர் நல்லகண்ணுதான். அவருக்கும், கட்சிக்கும் ஒருசேர நூற்றாண்டு கொண்டாடப்படுவது மேலும் ஒரு சிறப்பம்சம் ஆகும்.
நல்லகண்ணுவுக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே பாரதியார், திரு.வி.க. மற்றும் விவேகானந்தரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு உண்டு. இதனால் ஆரம்ப காலத்தில் தேச விடுதலையே தனது லட்சியமாக கொண்டு இருந்த அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்திய போராட்டங்களாலும், தோழர் ஜீவா பொதுக்கூட்டங்களில் ஆற்றிய உணர்ச்சிமிகு உரைகளாலும் ஈர்க்கப்பட்டு, தனது 18-வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இன்றளவும் சற்றும் பிறளாமல் அந்த கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
1948-ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்ட நேரத்தில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற தலைவர்களைப்பற்றி அவரிடம் விசாரித்தனர். தலைகீழாக தொங்கவிட்டு அடித்து, உதைத்த நேரத்திலும், மீசை முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி சித்ரவதை செய்த நேரத்திலும் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. 7 ஆண்டுகள் சிறையிலும் வாடினார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையே போராட்டங்கள், சிறைவாழ்க்கை என்று கழிந்தது. கட்சியில் பல பொறுப்புகளில் இருந்த நல்லகண்ணு நடை உடை பாவனைகளில் மிக எளிமையானவர். பேசும்போது மிகமென்மையாக பேசுவார். தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்ட நேரத்தில் அதற்காக கொடுக்கப்பட்ட நிதியை கட்சிக்கும், விவசாய சங்க வளர்ச்சிக்கும் கொடுத்துவிட்டார்.
2022-ல் தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கொடுத்த ரூ.10 லட்சம் ரூபாயுடன், கூடுதலாக ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிதிக்காக வழங்கிவிட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி அவரது 80-வது பிறந்தநாளின்போது கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியையும், கட்சிக்கான நிதியாக அந்த மேடையிலேயே கொடுத்துவிட்டார். இதுபோல அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்ட காரையும் கட்சிக்கே வழங்கினார். அவரது 80-வது பிறந்தநாளின்போது கலைஞர் கருணாநிதி, 'நல்லகண்ணு என்னைவிட 2 வயது இளையவர் என்றாலும், தியாகத்தால் என்னைவிட மூத்தவர்' என்று பெருமிதத்தோடு கூறினார்.
பூப்போன்ற இதயம் கொண்ட நல்லகண்ணு மக்கள் நலனுக்காக போராடும்போது இரும்பு மனம் கொண்டு களத்தில் இறங்குவார். தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையைக்கண்டு வெகுண்டெழுந்த அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அவரே தனது 86-வது வயதில் வாதாடி, மணல் அள்ள 5 ஆண்டுகளுக்கு தடையும் பெற்றுத்தந்ததால் மக்கள் அவரை மணல் காவலர் என்று போற்றி மகிழ்கிறார்கள். இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்து நூறு ஆண்டை தொட்டு வாழும் நல்லகண்ணு, மக்களுக்கு ஒரு நல்ல கண்ணாகவே திகழ்ந்து வருகிறார்.