< Back
தலையங்கம்
மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை!
தலையங்கம்

மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை!

தினத்தந்தி
|
4 Jan 2025 6:30 AM IST

3-வது முறையாக நிரம்பியிருக்கும் மேட்டூர் அணை விவசாயிகளுக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

சென்னை,

கட்டி முடிக்கப்பட்டு 90 ஆண்டுகளாகியுள்ள மேட்டூர் அணை தமிழக மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. 13 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து பாய்ந்தோடி வரும் தண்ணீர்தான் கைகொடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், புதுச்சேரி யூனியனில் உள்ள காரைக்காலுக்கும் இதுதான் ஜீவநதி.

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறது. தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பயன் கொடுக்காவிட்டாலும் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் நீராதாரமாக விளங்குகிறது. எனவேதான், தமிழக விவசாயிகள் தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் பெய்யும்போது பெருமகிழ்ச்சி அடைவார்கள். காரணம், அங்கு இருந்துதான் காவிரி ஆற்றில் மழைநீர் பாய்ந்தோடி மேட்டூர் அணையை நிரம்பச்செய்கிறது.

மேட்டூர் அணையை கட்டியது ஆங்கிலேயர்தான். சென்னை மாகாணத்தில் நீர்பாசன பொறியாளராக பணியாற்றி வந்த சர் ஆர்தர் தாமஸ் காட்டன் என்பவரால் 1834-ல் திருச்சி அருகே முக்கொம்பு அணை கட்டப்பட்ட பிறகு அந்த பகுதியில் விவசாயம் செழித்த அனுபவத்தை வைத்து காவிரியின் குறுக்கே மேட்டூரில் ஒரு அணையைக் கட்டலாம் என்ற யோசனை ஆங்கிலேயருக்கு வந்தது. 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி சென்னை மாகாண கவர்னர் 2-வது விஸ்கவுண்ட் கோஸ்சென் முன்னிலையில் மேட்டூர் அணை கட்டும் பணிகள் தொடங்கின. அப்போது தொடங்கி கர்னல் டபிள்யு.எம்.எல்லீஸ் வடிவமைப்பின்படி ரூ.4 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 9 ஆண்டுகள் கழித்து 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி கட்டி முடிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்தனர். இந்த அணை கட்டி முடிக்கப்பட்டபோது, இது உலகிலேயே மிகப்பெரிய அணையாக விளங்கியது. ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்ட அணை என்ற பெருமையை பெற்ற மேட்டூர் அணையின் உயரம் 120 அடியாகும். ஆனால், எல்லா ஆண்டும் முழுக்கொள்ளளவை எட்டியதில்லை. அணை திறக்கப்பட்ட 1934-ம் ஆண்டும், அதற்கு அடுத்த ஆண்டும் முழுமையாக நிரம்பவில்லை. ஆண்டுதோறும் மக்கள் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பாதா? என்று ஏங்கிக்கொண்டு இருப்பார்கள்.

கடந்த 90 ஆண்டுகளில் 49 ஆண்டுகள் இந்த அணை முழுமையாக நிரம்பவில்லை. சில ஆண்டுகள் ஒரு முறையும், சில ஆண்டுகள் 2 முறையும் நிரம்பின. கடந்த 2022-ல் முதல் தடவையாக 3 முறை மேட்டூர் அணை 120 அடியை எட்டி முழுமையாக நிரம்பியது. அதுவே வரலாற்று சாதனை என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரத்தில், கடந்த ஆண்டும் 2-வது தடவையாக 3 முறை நிரம்பியது. 3-வது முறை நிரம்பிய நேரம்தான் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு முடியும் தருவாயில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு 10 மணிக்கு 3-வது முறையாக நிரம்பியது. 2 மணி நேரம் கழித்து நிரம்பியிருந்தால் 2025-ம் ஆண்டு கணக்குடன் சேர்ந்திருக்கும். தற்போது, 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.

மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியிருக்கும் நேரத்தில், உபரிநீர் இப்போது அந்தப் பகுதியில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் புதிய திட்டத்தின்படி, மொத்தம் உள்ள 100 குளங்களில் 57 குளங்களை நிரம்பச் செய்திருக்கிறது. ஆக, 3-வது முறையாக நிரம்பியிருக்கும் மேட்டூர் அணை விவசாயிகளுக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. புத்தாண்டில் முதல் பண்டிகையாக வரும் பொங்கலையும் மகிழ்ச்சியோடு கொண்டாட செய்ய வழிவகுத்து இருக்கிறது.

மேலும் செய்திகள்