மல்யுத்த களமானதா மக்களவை?
|நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும், நல்ல பல விவாதங்கள் நடக்கும், நாட்டுக்கு தேவையான பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும், நம்முடைய பிரச்சினைகளுக்காக எம்.பி.க்களின் குரல் ஒலிக்கும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று நாட்டு மக்கள் நினைக்கும் அளவுக்கு கூட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை கூச்சல், குழப்பம், அமளியில் தொடங்கி மோதல் வரை சென்று முடிந்திருக்கிறது.
முதல் நாளில் அதானி பிரச்சினை அவையில் புயலை கிளப்பி, அவையையே நடக்கமுடியாதபடி ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பிறகு, பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாகவே ஒவ்வொரு நாளும் கழிந்தது. அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி இரு நாட்கள் மட்டும் அவையில் விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தின் போதுகூட அரசியல் சட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசாமல், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாக்கள் சூட்டை கிளப்பின. இதுதொடர்பான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது இப்போது பேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுள் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" என்று கூறியதும் அவையில் அனல் பறக்கத் தொடங்கியது.
இதை ஒரு துருப்பு சீட்டாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டு, அம்பேத்கரை பா.ஜனதா அவமதித்துவிட்டதாக குரல் எழுப்பினர். பா.ஜனதாவும் அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பதிலடி கொடுத்தது. நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியினர் கைகளில் அம்பேத்கர் படத்தை ஏந்திக்கொண்டு போராட்டம் நடத்தினர். அடுத்த நாளும் இந்த போராட்டம் தொடர்ந்தது. இதற்கு பதிலடியாக பா.ஜனதா கூட்டணி கட்சியினரும் 'மகர் தார்' என்று கூறப்படும் நுழைவு வாயில் அருகே காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்து விட்டதாக கூறி போராட்டம் நடத்தினர்.
இந்த நேரத்தில், அவைக்குள் செல்வதற்காக வந்த 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களுக்கும், பா.ஜனதா கூட்டணி உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜனதா முன்னாள் மந்திரி பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அவர்கள் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராகுல்காந்திதான் தள்ளிவிட்டதாக காயம் அடைந்த பா.ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் காங்கிரஸ் தலைவர் கார்கேயும், தன்னையும் பா.ஜனதா எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால் முழங்காலில் அடிபட்டு விட்டதாக கூறினார்.
இப்போது, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பா.ஜனதாவினர் ராகுல்காந்தி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் படுகாயம் ஏற்படுத்துதல், பிறரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், குற்றவியல் பலவந்தம், குற்றவியல் வன்முறை, பொது உள்நோக்கம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றும் இதே விவகாரத்தால் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆக, இந்த கூட்டத்தொடர் மக்களுக்கான பிரச்சினைகளை விவாதிக்காமல் மல்யுத்த களமாகவே முடிந்துவிட்டது.