கவர்னரின் வெளிநடப்பு வாடிக்கையாகிவிட்டது!
|தமிழகம் உள்பட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
சென்னை,
சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், வெளிநடப்பு செய்வது வழக்கம். அது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், ஆண்டுதோறும் முதல் கூட்டத்தில் உரையாற்ற வரும் கவர்னரே, இந்த ஆண்டு தனது கோரிக்கை ஏற்கப்படவில்லையென்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழகம் உள்பட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தில் அரசாங்கம் தயாரித்து கொடுத்த உரையையே கவர்னர் வாசிப்பார். மேற்கு வங்காளம், தெலுங்கானா மாநிலங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததால் கவர்னர் உரை இல்லாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் இடையே சுமுக உறவு இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக, அதாவது 2023, 2024-ம் ஆண்டுகளில் தனது உரையை ஆங்கிலத்தில் கவர்னர் வாசித்தபோது, மத்திய அரசாங்கத்தை குற்றம்சாட்டியும், மாநில அரசை பாராட்டியும் உள்ள வாசகங்களை விட்டு விட்டு படித்தார். அண்ணா, பெரியார், காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களைக்கூற கவர்னருக்கு மனமில்லை என்று விமர்சனங்கள் கூறப்பட்டன.
ஆனால் அவையிலேயே, அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு, தொடர்ந்து சபாநாயகர் தமிழில் கவர்னர் உரையை முழுமையாக படிக்க தொடங்கியவுடன் கவர்னர் வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டும் கடந்த திங்கட்கிழமையன்று கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்தபோது காரில் இருந்து இறங்கியவுடன் சபாநாயகர் அப்பாவு பூச்செண்டு கொடுத்து வரவேற்ற நேரத்தில் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். ஆனால், சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் பூச்செண்டு கொடுத்த நேரத்தில் புன்முறுவலோடு அதை வாங்கினார். அப்போதே அவைக்குள் ஏதோ செய்யப்போகிறார் என்று நினைக்கத்தோன்றியது.
அதுபோல, அவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்றனர். அந்தபாடல் முடிந்தவுடன் அனைவரும் அமர்ந்துவிட்டு, கவர்னரின் உரையைக்கேட்க தயாராகினர். ஆனால், கவர்னர் தனது உரையை நிகழ்த்தவில்லை. மாறாக அவர், "தமிழ்த்தாய் வாழ்த்தைத்தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தேன். அது இன்றும் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, வெளிநடப்பு செய்கிறேன்" என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். மொத்தத்திலேயே 3 நிமிடங்கள்தான் அவர் அவையில் இருந்தார்.
அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை முழுமையாக தமிழில் வாசித்தார். அதை அவைக்குறிப்பில் ஏற்றவேண்டும் என்று அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, அவைக்குறிப்பிலும் ஏற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளிலும் கவர்னர் தன் உரையை முழுமையாக படிக்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறார். அப்போது உரையை ஒட்டியும், வெட்டியும் பேசினார். ஆனால், இந்த ஆண்டு உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டார். 1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கவர்னர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் மரபாக இருந்துவருகிறது. இந்த ஆண்டுதான் இது பிரச்சினையாக முளைத்திருக்கிறது. எதிர்காலங்களிலும் அவரை தி.மு.க அரசு அழைக்காமல் இருக்கப்போவதில்லை. எனவே, இந்த வெளிநடப்பு தொடர்கதையாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.