அரசு மருத்துவமனைகளுக்கு வசதிகள் தேவை!
|அரசு மருத்துவமனைகளில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது
சென்னை,
தமிழ்நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மிக சிறப்பாக இருக்கின்றன. மக்களுக்கு மருத்துவ சேவைகளை குறையின்றி வழங்க முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மைக்காக்கும் 48 மற்றும் மக்களை தேடி மருத்துவம் போன்ற சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவது, குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அது தரமானதாக எளிதில் கிடைப்பதையும் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 62 அரசு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள், சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 256 தாலுகா மற்றும் தாலுகா சாரா மருத்துவமனைகள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சைகளில் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகவே உள்ளது. அந்த மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து கருவிகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கி வருகிறது. பெரிய கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் அனைத்து உயர் ரக கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் இப்போது அரசு மருத்துவமனைகளிலும் இருக்கிறது. மிகவும் திறமை வாய்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுப்பை மெச்சத்தகுந்த அளவில் கவனித்து வருகிறார். எந்த ஊருக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்கிறார்.
இவ்வளவு இருந்தும் ஏன் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்கிறார்கள்? என்று பார்த்தால், அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள். மருந்துகளும் தரமாக இருக்கிறது. பரிசோதனை கருவிகளும் உயர் தரத்தில் உள்ளது. ஆனால், சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரான கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அனைத்து அரசு மருத்துவமனை டீன்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளுடன் நல்ல அணுகுமுறையோடு இருக்கவேண்டும். நோய் தொற்று கிருமிகள் இல்லாத அளவுக்கு சுகாதார வசதிகள் இருக்கவேண்டும். நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் இருக்கவேண்டும். தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் தூய்மை நிலை குறைவு. அரசு வாங்கிக்கொடுத்துள்ள புதிய கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஒருங்கிணைப்பு இல்லாமலும், லைசென்சு பிரச்சினையாலும் செயல்படாமல் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், ஸ்டிரெச்சர்கள் மற்றும் நோயாளிகள் காத்திருக்க அமரும் நாற்காலிகள் உடைந்தும் சேதம் அடைந்தும் துருப்பிடித்தும் இருக்கின்றன. உடைந்த ஜன்னல்கள், சேதமடைந்துள்ள கதவுகள், சுத்தம் இல்லாத தரைகள் என்று பல குறைகளை சுப்ரியா சாகு பட்டியலிட்டுள்ளார். இந்த குறைகளையெல்லாம் மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தால் போதும், நமது அரசு மருத்துவமனைகள் சிகிச்சையில் மட்டுமல்லாது, சுத்தத்திலும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக விளங்கும். நோயாளிகளும், அவர்களுடன் வருபவர்களும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.