மாணவிகளுக்கு வேண்டும் பாதுகாப்பு
|ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கு ஆசிரியரின் பங்களிப்புதான் அதிகம் என்ற உணர்வு சமுதாயத்தில் இருக்கிறது.
"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது நமது மூதாதையர் வாக்கு. அதுபோல, "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு நிகராக கருதும் நன்மொழியும் உண்டு. மாணவர்கள், பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கும் நேரத்தைவிட ஆசிரியர்களின் கண்காணிப்பில், பாதுகாப்பில் இருக்கும் நேரம்தான் அதிகம். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக மட்டுமல்லாமல், அவர்கள் குணநலன்கள் தொடர்பாகவும் ஆசிரியர்களிடம்தான் முறையிடுவது வழக்கம்.
ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கு ஆசிரியரின் பங்களிப்புதான் அதிகம் என்ற உணர்வு சமுதாயத்தில் இருக்கிறது. ஆசிரியர்களும் தன்னிடம் படிக்கும் மாணவ-மாணவிகளை தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு நிகராகவே பாவித்து நடத்தவேண்டும் என்பதுதான் தார்மீகம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர் என்பது நியதி. அப்படிப்பட்ட ஆசிரியர் சமுதாயத்தில் சில புல்லுருவிகள் முளைத்து மாணவ-மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யும் நிகழ்வுகள் சமீப காலமாக அடிக்கடி நடக்கிறது.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஒன்றில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, மாணவிகளை அங்கு அழைத்துச் சென்று 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் 13 மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கும் ஆளாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்து காவலில் வைத்திருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இருந்து தூத்துக்குடியில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் சில மாணவிகளை அழைத்துச் சென்ற 42 வயது உடற்பயிற்சி ஆசிரியர், தங்கியிருந்த இடத்தில் 2 மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நிலையில் போலீசில் பிடிபட்டார். இதை மூடி மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியையும், செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஒரு ஆசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை போக்சோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சில சம்பவங்கள் எங்கே நடந்துவிடுமோ? என்ற அச்சம் பெற்றோருக்கு இருக்கக்கூடாது. தமிழக அரசு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதை தடுக்க இப்போது சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் பொருட்டு பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும். மாணவ-மாணவிகள் இதுபோன்ற புகார்களை தெரிவிப்பதற்கு பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள 'மாணவர் மனசு' என்ற புகார் பெட்டியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாணவ- மாணவிகளை வெளியே அழைத்து செல்லும்போது பெற்றோரிடமும், மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியே எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் கண்டிப்பாக பெறவேண்டும்.
இதுமட்டுமல்லாமல், 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர், 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை இவ்வாறு வெளியே செல்லும்போது உடன் செல்லவேண்டும். அரசின் இந்த நடவடிக்கை எழுத்தில் மட்டும் இல்லாமல், செயலிலும் இருக்கவேண்டும். ஆசிரியர்களுக்கும் தன்னிடம் படிக்கும் மாணவ-மாணவிகள், தாங்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்ற உணர்வை ஊட்டவேண்டும். இந்த நேரத்தில் சென்னை ஐகோர்ட்டு, "ஆசிரியர் பணி நியமனத்தின்போது அவர்களின் குற்றப் பின்னணி குறித்து போலீஸ் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது?" என்று எழுப்பிய கேள்வி தொடர்பாகவும் அரசு பரிசீலிக்கவேண்டும்.