< Back
தலையங்கம்
Fadnavis is back!
தலையங்கம்

மீண்டு (ம்) வந்தார் பட்னாவிஸ்!

தினத்தந்தி
|
11 Dec 2024 6:02 AM IST

2023-24-ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மராட்டியம்தான் முதல் இடம்.

சென்னை,

மராட்டிய மாநிலம் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேலோங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 14 சதவீதம் மராட்டியத்தின் பங்களிப்பாக இருக்கிறது. 2023-24-ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மராட்டியம்தான் முதல் இடம். இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 101 கோடி முதலீடுகளையும், நடப்பு ஆண்டின் முதல் 2 காலாண்டுகளில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளை ஈர்த்தும் பெரும் சாதனை புரிந்துள்ளது.

இந்தியாவிலேயே முதலாவதாக ரூ.86 லட்சம் கோடி பொருளாதார மாநிலமாக 2027-28-ல் ஆகிவிடவேண்டும் என்ற இலக்கை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது. இங்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பா.ஜனதா மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) ஆகிய கட்சிகளைக்கொண்ட 'மகா யுதி' கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஆகிய கட்சிகளை கொண்ட 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியும் போட்டியிட்டன.

சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் பிளவுப்பட்டாலும், உடைப்பை ஏற்படுத்திய அணிகளே நல்ல பலத்துடன் அதிகாரப்பூர்வ கட்சிகளாகிவிட்டன. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களையும் தாண்டி 'மகா யுதி' கூட்டணி 230 இடங்களில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் 132 இடங்களில் பா.ஜனதாவும், 57 இடங்களில் சிவசேனாவும், 41 இடங்களில் தேசியவாத காங்கிரசும் வெற்றி பெற்றது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணிதான் வெற்றி பெற்று இருந்தது. அப்போதும் பா.ஜனதாவே அதிக இடங்களில் அதாவது 105 இடங்களில் வெற்றி வாகை சூடியது. கூட்டணி கட்சியான பிளவுப்படாத சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வௌியேறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். 2½ ஆண்டுகளுக்கு பிறகு ஆளுங்கட்சியான சிவசேனாவை உடைத்து வந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஏற்கனவே முதல்-மந்திரி பொறுப்பை வகித்த அனுபவம் பெற்ற பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். அடுத்த சில மாதங்களுக்கு பிறகு தேசியவாத காங்கிரசை உடைத்த அஜித் பவாரும் கூட்டணி ஆட்சியில் கைகோர்த்து துணை முதல்-மந்திரி ஆனார்.

கடந்த முறை துணை முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் இந்த முறை முதல்-மந்திரியாகவும், முதல்-மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரியாகவும் சர்க்கசில் 'பார்' விளையாட்டில் இந்த பக்கத்தில் இருந்து, அடுத்த பக்கத்துக்கு தாவி குவிப்பது போல மாறியிருக்கிறார்கள். இவர்கள் மூவரையும் தாண்டி மந்திரிகள் யாரும் நியமிக்கப்படாத நிலையில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை கோரும் தீர்மானத்தையும் கொண்டுவந்து, அதிலும் வெற்றி பெற்று புதிய நடைமுறையை மராட்டிய சட்டசபை படைத்துள்ளது. இனி தேர்தல் வாக்குறுதிகளை மராட்டிய அரசு எப்படி நிறைவேற்றப்போகிறது?, அதற்கான நிதியை எப்படி திரட்டப்போகிறது? என்பதைத்தான் அந்த மாநில மக்கள் உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்