< Back
தலையங்கம்
சட்டசபையில் பொருளாதார ஆய்வறிக்கை
தலையங்கம்

சட்டசபையில் பொருளாதார ஆய்வறிக்கை

தினத்தந்தி
|
8 March 2025 5:51 AM IST

தாக்கல் செய்யப்படும் ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தின் வளர்ச்சியை அறிந்துகொள்ளமுடியும்.

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அதாவது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த பொருளாதார ஆய்வறிக்கை என்பது மிக மிக முக்கியமானதாகும். இந்த ஆய்வறிக்கையை நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும். ஏனெனில் இந்த ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலைமை, அரசாங்க திட்டங்களின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த வளர்ச்சி, விவசாய உற்பத்தி வளர்ச்சி, தொழில் மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்களிப்பு குறித்து தெரிந்து கொள்ளமுடியும். மொத்தத்தில் இது நாட்டின் பொருளாதார நிலையை தெளிவாக காட்டும் காலக்கண்ணாடி என்றே சொல்லலாம்.

இதை நிதி மந்திரி தாக்கல் செய்தாலும் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் தயாரிப்பார். நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்கள் பேசும்போது இந்த பொருளாதார ஆய்வறிக்கையின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்தின் சாதனைகளை இந்த ஆய்வறிக்கையில் உள்ள அம்சங்களை மேற்கோள் காட்டி பேசுவார்கள். எதிர்க்கட்சியினர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை எடுத்துக்கொண்டு அரசாங்கத்தின் மீது கண்டன கணைகளை வீசுவார்கள். இத்தகைய பொருளாதார ஆய்வறிக்கைகள் பல மாநில சட்டசபைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆந்திராவில் சமூக பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரிலும், தெலுங்கானாவில் சமூக பொருளாதார கண்ணோட்டம் என்ற பெயரிலும், கர்நாடகா மற்றும் கேரளாவில் பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரிலும் ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை எந்த அரசுகளும் இதுபோல பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லையே என்ற குறை இருந்தது. அந்தக்குறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கிவிட்டார். இந்த ஆண்டு முதல் மாநிலத்தின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வருகிற 14-ந்தேதியன்றே இந்த பொருளாதார ஆய்வறிக்கையும் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக திட்டக்குழு உதவியுடன் நிதித்துறை இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்யப்போகும் பொருளாதார ஆய்வறிக்கையில் விரிவான பொருளாதார நிலைமைகள் பிரதிபலிக்கப்படும். விவசாயம், கால்நடை, வனம், மீன் வளர்ப்பு, சுரங்கம் போன்ற தொழில்கள் மட்டுமல்லாமல் உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, நீர் வினியோகம், கட்டுமானம் பொது நிதி, விலைவாசி, ஏழ்மை, வேலைவாய்ப்பு, நீடித்த வளர்ச்சி இலக்குகள் போன்ற பல தலைப்புகளில் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த துறைகளில் எல்லாம் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது? எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது? இன்னும் எவ்வளவு வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? என்பதோடு அரசின் ஒவ்வொரு திட்டங்களும் எந்த அளவில் மக்களை சென்றடைந்து இருக்கிறது, அதனால் என்ன பலன் கிடைத்து இருக்கிறது என்பது போன்ற பல விவரங்களை இந்த ஆய்வறிக்கையில் காணலாம்.

இது ஒரு தொடக்கம்தான் என்றாலும், இதை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தின் வளர்ச்சியை அறிந்துகொள்ளமுடியும். மேலும் ஏதாவது துறையின் வளர்ச்சியில் தொய்வு இருந்தால் அதை சரி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும். மொத்தத்தில் இது ஒரு மாணவனுக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் அட்டை போல அரசின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு மதிப்பீடாக இருக்கும்.

மேலும் செய்திகள்