இதில் முதல் இடம் வேண்டாமே!
|எதில் கடைசி இடத்தில் இருக்க வேண்டுமோ? அதிலும் முதல் இடத்தில் இருப்பதுதான் தமிழக அரசுக்கு அதிர்ச்சியையும், தமிழக மக்களுக்கு வேதனையையும் அளிக்கிறது
சென்னை,
தமிழகம் எல்லா துறைகளின் வளர்ச்சியிலும் முன்னோக்கி சென்று கொண்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. ஆனால், எதில் கடைசி இடத்தில் இருக்க வேண்டுமோ? அதிலும் முதல் இடத்தில் இருப்பதுதான் தமிழக அரசுக்கு அதிர்ச்சியையும், தமிழக மக்களுக்கு வேதனையையும் அளிக்கிறது. இதில் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு. ஆம், சாலை விபத்துகளின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு கடைசி இடங்களில் இருந்தால்தான் பாதுகாப்பான பயணமாக அமையும். ஆனால், தமிழகம் அதில் முதலிடத்தில் இருக்கிறது.
இப்போது மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மிக வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது. கார் ஒரு ஆடம்பர வாகனம் என்ற நிலைமாறி, இப்போது குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. எவ்வளவு ஏழை குடும்பமாக இருந்தாலும் இருசக்கர வாகனம் என்பது அவர்களின் கட்டாய தேவையாகிவிட்டது. இப்படி ஒரு பக்கம் வாகனங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்து கொண்டே போனாலும், மறுபக்கம் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு ஆண்டும் குறைவதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டே போகும் நிலைதான் உள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசாங்கம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து விட்டதை குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 474 பேர் விபத்துகளில் மாண்டு போகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் தன் உயிரை இழக்கிறார். இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் இதுதான் அதிகம். இந்த பட்டியலில் விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் கடந்த 2022-ல் முதல் இடத்தில் தமிழ்நாடும், இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசமும் இருந்த நிலையில் 2023-ல் முதல் இடத்தில் உத்தரபிரதேசமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது.
ஆனால் விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 72,292 பேர் சாலை விபத்துகளில் காயம் அடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள மத்தியபிரதேசத்தில் 55,769 பேரும், 3-வது இடத்தில் உள்ள கேரளாவில் 54,320 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த கணக்கைப் பார்த்தால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆக, சாலை விபத்துகளை தடுப்பதில் தமிழக அரசு இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.