< Back
தலையங்கம்
அச்சம் வேண்டாம்; ஆனால் எச்சரிக்கை தேவை!
தலையங்கம்

அச்சம் வேண்டாம்; ஆனால் எச்சரிக்கை தேவை!

தினத்தந்தி
|
9 Jan 2025 6:33 AM IST

சீனாவில் இருந்து எச்.எம்.பி.வி. வைரஸ் என்ற தொற்று பரவ தொடங்கியிருக்கிறது.

சென்னை,

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்குள் அதிலும் கேரளாவுக்குள் நுழைந்த கொரோனா தொற்று பிறகு வேகமாக நாடு முழுவதும் பரவி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. கொத்து கொத்தாக உயிர்கள் பலியாகின. பொருளாதாரம் அடியோடு சீரழிந்தது. மக்களின் வாழ்வாதாரமும் சீர்குலைந்தது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்டிப்படைத்த கொரோனாவின் கொடிய சுவடு இன்னும் மறையவில்லை. மக்கள் இப்போதுதான் கொரோனாவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா சீனாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது. அதேபோல் சீனாவில் இருந்து இப்போது எச்.எம்.பி.வி. வைரஸ் என்ற தொற்றும் பரவ தொடங்கியிருக்கிறது.

சீன மருத்துவமனைகளெல்லாம் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. இப்போது எல்லா நாட்டினருக்கும் ஒரு பயம் வந்துவிட்டது. எப்படி கொரோனா சீனாவில் இருந்து தோன்றி உலகம் முழுவதையுமே உலுக்கியதோ அதுபோல இந்த எச்.எம்.பி.வி. தொற்றும் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சத்துக்கேற்ப எச்.எம்.பி.வி. என்ற 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்றும், சீனா வைரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த தொற்று தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்குள் மெல்ல காலடி எடுத்து வைத்துவிட்டது. இந்த தொற்று பெரும்பாலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த தொற்று மூச்சுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு தொல்லை, தொண்டை வலி, சோர்வு போன்ற அறிகுறிகளோடு வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் நீர் துளிகளால்தான் மற்றவர்களுக்கு பரவுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் பரவியுள்ள இடங்களை தொட்டுவிட்டு, பிறகு அதே கைகளைக்கொண்டு வாய், மூக்கு, கண்களை தொடும்போது பரவ தொடங்கிவிடுகிறது. கொரோனா முதலில் ஓரிருவருக்குத்தான் வந்தது. பிறகுதான் அலை அலையாய் பரவ தொடங்கியது. அதுபோலத்தான் இந்த எச்.எம்.பி.வி. தொற்றும் தன் ஆட்டத்தை தொடங்கும் என்று டாக்டர்கள் அச்சப்படுகிறார்கள்.

இந்த தொற்றால் கொரோனா அளவுக்கு உயிர்ச்சேத பயம் வேண்டாம் என்றாலும், பாதிப்பு ஏற்பட்டால் கடும் உடல்நலக்குறைவால் 3, 4 நாட்கள் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கென தனி சிகிச்சை எதுவும் இல்லை. இருந்தாலும் மருத்துவ உதவி தேவைப்படும். இந்த தொற்று ஏற்பட்டு இருக்கிறதா? என்பதை செய்யும் பரிசோதனைக்கான கட்டணம் மிக அதிகமாகும். எனவே எல்லோரும் இந்த பரிசோதனையை தனியார் மருத்துவமனையில் போய் பார்க்க முடியாது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனையை நடத்தவேண்டும். இந்த எச்.எம்.பி.வி. தொற்றை கண்டு கொரோனா அளவுக்கு பயப்படவேண்டாம் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசர அவசியமாகும்.

"தனியாக இருந்தால் தானாகவே போய்விடும். அச்சப்படத் தேவையில்லை" என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறும்போது, "கூடுமானவரை குழந்தைகள், இணை நோய் உள்ள முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்வது நல்லது. கொரோனா காலத்தில் பின்பற்றியது போன்று கைகளை அடிக்கடி கழுவுதல், வெளியே போய்விட்டு வந்தால் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது நல்லது" என்று அறிவுரை வழங்கியுள்ளார். மொத்தத்தில் இந்த தொற்றுக்கு பயமும் வேண்டாம், பீதியும் வேண்டாம். அதேநேரத்தில் முன்னெச்சரிக்கையாக கண்டிப்பாக இருக்கவேண்டும்.

மேலும் செய்திகள்