< Back
தலையங்கம்
Cyclone Fenjal that showed Hide and seek!
தலையங்கம்

கண்ணாமூச்சி காட்டிய 'பெஞ்ஜல்' புயல்!

தினத்தந்தி
|
3 Dec 2024 6:41 AM IST

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்கிறது

சென்னை,

தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. ஆனால், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழைபொழிவை பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, பருவமழை காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மழை பெய்யும். அது புயலாக வலுப்பெறும்போது பெருமழையை தருவதுடன் பேரழிவையும் ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில், வங்கக் கடலில் கடந்த மாதம் 23-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது 25-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கு அடுத்த நாளே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அதன்பிறகு, இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டது. இந்த முன்னறிவிப்பை நம்பி தமிழக அரசும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. பேரிடர் கட்டுப்பாட்டு மையமும் முழு வீச்சில் இயங்கியது. ஆனால், அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல் வலுவிழந்து ஏமாற்றம் அளித்தது.

இந்த மாற்றத்தினால் பெரிய அளவில் மழை இருக்காது என்று கூறப்பட்ட நேரத்தில், கடந்த மாதம் 28-ந்தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு சவுதி அரேபியா தேர்வு செய்திருந்த 'பெஞ்ஜல்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் எங்கு கரையைக் கடக்கும்? என்பதை முதலில் இருந்தே யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. தமிழகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த புயல் கரையை நெருங்க.. நெருங்க.. வேகம் குறைந்து கொண்டே வந்தது. 12 கி.மீ., 10 கி.மீ. என குறைந்து, கடைசியில் 7 கி.மீ. வேகத்தில் கடந்த 30-ந்தேதி இரவு புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது.

ஆனால், அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடவில்லை. கரையை கடக்க 12 மணி நேரத்துக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டது. இதனால் சென்னையில் காற்றுடன் கனமழை பெய்தபோதும், புதுச்சேரி, விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் யாரும் எதிர்பாராத வகையில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. ஒரு வழியாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த 'பெஞ்ஜல்' புயல் கடந்த 1-ந்தேதி காலை 11.30 மணிக்கு தனது ஆட்டத்தை முடித்து வலுவிழந்து போனது. என்றாலும், கடைசி நேரத்தில்கூட கிருஷ்ணகிரி - சேலம் - வேலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்தது. அரசு எந்திரங்கள் எல்லாம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புயல் கண்ணாமூச்சி விளையாடியது ஒரு பக்கம் இருந்தாலும், வானிலை ஆய்வு மையத்தால் அதை துல்லியமாக கணிக்க முடியாமல் போனதை யாரும் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் வானிலையை துல்லியமாக கணிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் கொண்ட செயற்கைக்கோள்களை பூமிக்கு மேலே பறக்கவிட்டு, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க தயார் நிலையில் இருக்க முடியும். பாதிப்புகளையும் குறைத்து மக்களை காக்க முடியும்.

மேலும் செய்திகள்