< Back
தலையங்கம்
Can we forget Manmohan Singh?
தலையங்கம்

மறக்க முடியுமா மன்மோகன்சிங்கை?

தினத்தந்தி
|
28 Dec 2024 6:22 AM IST

மிகச்சிறந்த பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கை மறக்கமுடியுமா? என்று நாடு என்றென்றும் மனதில் வைத்து கொண்டாடும்.

சென்னை,

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். மறைந்து இருக்கிறார்கள். மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்பவர்கள் ஒரு சிலரே. அந்தவகையில் மிகச்சிறந்த பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கை மறக்கமுடியுமா? என்று நாடு என்றென்றும் மனதில் வைத்து கொண்டாடும்.

1991-ம் ஆண்டு இந்தியா கடும் பொருளாதார வீழ்ச்சியில், சுனாமியில் சிக்கிய படகுபோல தத்தளித்துக்கொண்டிருந்தது. கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. நிதி நெருக்கடி சுழன்று அடித்தது. நாட்டில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எல்லாம் தங்கள் முதலீடுகளை வேறுநாடுகளுக்கு முதலீடு செய்ய எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அன்னிய செலாவணி கையிருப்பு அதலபாதாளத்துக்கு போய்விட்டது. ரூ.2,500 கோடி மதிப்புள்ள அன்னிய செலாவணி அடுத்த 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமான வகையில் இருந்தது. அதன்பின் நாட்டின் இறக்குமதிகளுக்கு என்ன செய்வது? என்று தெரியாமல் நிர்வாகம் குழம்பிக்கொண்டிருந்தது. நாட்டில் கையிருப்பில் உள்ள தங்கமும் அடகுக்காக லண்டன் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. நாடே திவாலாகிவிடுமோ? என்ற அச்சம் எழுந்தது. அந்தநேரத்தில் ஆபத்பாந்தவனாக நாட்டுக்கு கிடைத்தது மன்மோகன்சிங்தான்.

பஞ்சாப் கல்வி நிறுவனங்களில் பள்ளிப்படிப்பையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பையும் முடித்துவிட்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார். பொருளாதாரத்தில் கரைகண்ட அவர், 1971-ல் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், திட்டக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் முத்திரை பதித்துவிட்டு, ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 வரை இருந்து பல்வேறு நிதிச்சீர்திருத்தங்களை கொண்டுவந்து ஜொலித்தார். பின்பு திட்டக்குழு துணைத்தலைவராகவும், தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் பொதுச்செயலாளராகவும் அதன்பின் பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் கடைசியாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவராகவும் இருந்தார்.

நாடு பொருளாதார வீழ்ச்சியில் தத்தளித்து கொண்டிருந்தநேரத்தில், அதை சமாளித்து கைத்தூக்கி கொண்டுவர மன்மோகன்சிங்தான் சரியானவர் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அடையாளம் கண்டார். 1991-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி பிரதமர் நரசிம்மராவ் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்ல உடையணிந்து உடனடியாக ஜனாதிபதி மாளிகைக்கு வரவேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து, நிதி மந்திரியாக்கினார். இதுதான் அவரது அரசியல் பிரவேசம். நிதி மந்திரியாக அவர் செய்த பல சீர்திருத்தங்கள் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதையில் பீடுநடைபோட வைத்தது. அவரது ஆற்றல் நாட்டையே வியக்கவைத்தது. 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதும் சோனியாகாந்தி, தான் பிரதமராக விரும்பாமல் மன்மோகன் சிங்கையே பிரதமராக்கினார். 'சிங் இஸ் தி கிங்' மன்மோகன்சிங்தான் சிங்கம் என்று நாடு புகழாரம் சூட்டியது. நூறுநாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், புதிய தொழில்கொள்கை, பெரும்பாலான வர்த்தக லைசென்சுகளை ஒழித்தது, சுதந்திரமாக தொழில்செய்ய வழிகளை உருவாக்கியது, அன்னிய முதலீடுகளுக்கு நாட்டின் கதவுகளை திறந்துவைத்தது, வங்கிச்சீர்திருத்தங்கள் என்று அவரது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக இருமுறை பிரதமர் பதவியில் இருந்த அவர், அதிகம் பேசாதவர். ஆனால் செயலில் பல சாதனைகளை புரிந்தவர். 2008-ல் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளாடிக்கொண்டிருந்த நேரத்தில்கூட இந்தியா சரிவை காணாமல் ஏற்றமிகு பாதையிலேயே சென்றது என்றால், அது மன்மோகன்சிங்கின் திறமையின் காரணமாகத்தான். ஆக மன்மோகன்சிங் மறைந்தாலும் பல பாதைகளை வகுத்துக்கொடுத்து சென்றிருக்கிறார்.

மேலும் செய்திகள்