வெள்ள பாதிப்பு அறிக்கைகளில் முரண்பாடா?
|மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு, 'பெஞ்ஜல்' புயல் பாதிப்பு குறித்து தயாரித்த அறிக்கையில், முரண்பாடான தகவல்களை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புயல் காலத்தில் ஏற்படும் மழை வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி விடுகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'மிக்ஜம்' புயலால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமழை பாதிப்பாலும் ஏற்பட்ட வடுக்கள் ஓராண்டாகியும் இன்னும் மறையவில்லை. அதுபோல, இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி உருவான 'பெஞ்ஜல்' புயல் மெல்ல.. மெல்ல.. நகர்ந்து 30-ந்தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்ததுடன், இம்மாதம் 1-ந்தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்குள்ளும் புகுந்து 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றாக வீசி, கனமழையையும் பொழியச் செய்து 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இது போதாதென்று, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்ட ஒரு லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீரால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில், ஆற்றின் கரையோர பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது. பொதுவாக, இதுபோன்ற இயற்கை பேரிடர்களின்போது சேத விவரங்கள் பற்றிய அறிக்கைகளை துல்லியமாக தயாரித்தால்தான் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு போதிய நிதியை ஒதுக்க முடியும். அந்த வகையில், கடந்த 2-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் சேத விவரங்களை விளக்கியுள்ளார்.
"இந்த பேரிடரால் 69 லட்சம் குடும்பங்களும், 1½ கோடி மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 963 கால்நடைகள் இரையாகியுள்ளன. மேலும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் சேதமடைந்ததுடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 139 ஹெக்டேர் பரப்பளவுள்ள விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ள அவர், புயல் வெள்ளத்தினால் 9,576 கி.மீ. சாலைகள், 1,847 சிறு பாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், 1,649 கி.மீ. அளவுக்கு மின் கடத்திகள், 23,664 மின் கம்பங்கள், 997 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும் விளக்கியுள்ளார். இதேபோல், மேலும் பல சேதங்களைக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த சேதங்களை சரிசெய்ய தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது" என்றும் குறிப்பிட்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு, 'பெஞ்ஜல்' புயல் பாதிப்பு குறித்து தயாரித்த அறிக்கையில், முரண்பாடான தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், 26 மனித உயிர்களும், 403 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 ஆயிரத்து 905 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும், 2,294 வீடுகள், குடிசைகள் மட்டுமே சேதமடைந்து இருப்பதாகவும், 27 நிவாரண முகாம்களில் 1,749 பேர்கள்தான் தங்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்பதால், தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக மத்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு, உண்மையான சேத விவரங்களை விளக்கி, இந்த முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசாங்கத்திடம் இருந்து போதிய நிவாரண நிதி உரிய நேரத்தில் கிடைக்கும்.