அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
|அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம் தேதி தேனியில் போலீசார் கைது செய்தனர். கைதின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கஞ்சா வழக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தூய்மை பணியாளர் தொடர்பாக தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பேசி வெளியிட்டதற்காக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.