< Back
மாநில செய்திகள்
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: காவல்நிலைய மரணமாக வழக்குப் பதிவு
மாநில செய்திகள்

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: காவல்நிலைய மரணமாக வழக்குப் பதிவு

தினத்தந்தி
|
24 Nov 2024 11:40 AM IST

காவல் நிலையத்தில் இருந்த போது விக்னேஸ்வரனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதை மாத்திரை பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது என 14 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் 13 பேர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த 13 இளைஞர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சாந்தபுரம் ஏழாம் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் விக்னேஸ்வரன்.

இவர் காவல் நிலையத்தில் இருந்த போது விக்னேஸ்வரனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அதே போன்று காவல் நிலையத்தில் இருந்த இருவருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதில் தான் விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விக்னேஷ்வரனுக்கு ஏற்கனவே உடல்நலக் குறைவு இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதே சமயம் விக்னேஸ்வரன் உயிரிழந்ததை காவல் நிலைய மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த விக்னேஸ்வரன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரணம் தொடர்பாக குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி விஜயபாரதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்