ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
|நண்பர்களுடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலாஜி, திருமுருகன் மற்றும் மேகநாதன். இவர்களில் மேகநாதன், பாலாஜி இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். திருமுருகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் உத்திரமேரூர் ஒன்றியம் அனுமந்தண்டலம் அருகே செய்யாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகே குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் பாலாஜி மட்டும் கரையில் நின்று கொண்டார். திருமுருகனும், மேகநாதனும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
இதனிடையே நண்பர்கள் இருவரும் ஆற்றில் நீந்தியபடி படிக்கட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் திருமுருகனை மட்டும் காப்பாற்றினார்கள். ஆனால் மேகநாதன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுபற்றி உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஆற்றில் மூழ்கிய மேகநாதனை பிணமாக மீட்டனர். இது பற்றி பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவலு வழக்குப்பதிவு செய்து ஆற்றில் மூழ்கி பலி்யான மேகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.