< Back
மாநில செய்திகள்
திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது
மாநில செய்திகள்

திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது

தினத்தந்தி
|
29 Dec 2024 8:30 AM IST

பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

அமைந்தகரை,

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான'பியூட்டி பார்லர்' உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலை முடிந்து அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.

இதையடுத்து பியூட்டி பார்லர் மேலாளர், அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தனர். அப்போது மாடியில் இருந்து 'குறட்டை' சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மாடியில் சென்று பார்த்த போது, மது போதையில் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தட்டி எழுப்பி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து திருட முயன்றதும், எதுவும் கிடைக்காததால், மதுபோதையில் மாடியில் தூங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதாவது கடைகளில் திருடியுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்