உலக எய்ட்ஸ் தினம்: எச்.ஐ.வி. தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எச்.ஐ.வி. தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பொதுமக்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் "உலக எய்ட்ஸ் தினமாக" அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் "Take the Rights Path", அதாவது, "உரிமைப் பாதையில்" என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்ஸை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எச்.ஐ.வி தடுப்புப் பணியினை திறம்பட செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டிலிருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் "நம்பிக்கை மையம்" வாயிலாக எச்.ஐ.வி மற்றும் சிபிலீஸ் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தொற்று இருப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி, முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழ்நாடு அரசின் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை 2009-ஆம் ஆண்டு, ஐந்து கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு இந்த அறக்கட்டளைக்கு இதுவரை 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையின் மூலமாக ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்றவற்றை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.
இதன்மூலம் 2023-24 நிதியாண்டில் 7,303 குழந்தைகள் பயன்பெற்றுள்ளார்கள். இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடித் திட்டமாகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடுச் சங்கம், இந்த ஆண்டின் சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த "ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12, 2024" வரையிலான நாட்களில் பொதுமக்களுக்குத் தீவிர விழிப்புணர்வு பிரச்சார சேவையினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இணையதளம் வாயிலாக நடத்தப்பெற்ற வினாடி வினா போட்டியில், 1,053 கல்லூரிகளிலிருந்து 24,171 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மேலும், தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாளன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு என நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.