ஆற்றில் மீன் பிடித்தபோது மலைத்தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி
|தொழிலாளியின் மகன், மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மொளசி பச்சப்பாளி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). அவருடைய மகன் அருள் (36), மகள் சரண்யா (38). இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் மீன்பிடிப்பதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பாசூரில் உள்ள காவிரி ஆற்று பகுதிக்கு வந்திருந்தனர்.
கரையில் அமைந்துள்ள மின் மயானம் அருகே உள்ள பகுதியில் அமர்ந்து ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென மலைத்தேனீக்கள் பறந்து வந்தன. அவர்களை மலைத்தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டின. இதில் தங்கராஜ், அருள், சரண்யா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தங்கராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அருள், சரண்யா சிகிச்சை பெற்று வருகின்றனர்.