
ரூ.14.15 கோடி மதிப்பில் பரங்கிமலை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்

ரூ.14.15 கோடி மதிப்பில் பரங்கிமலை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையம் சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது. சென்னையின் மெட்ரோ போக்குவரத்தும், மின்சார ரெயில் போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
மேற்கொண்டு மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாக செல்கிறது. தற்போது விரிவாக்க பணியில் உள்ள பறக்கும் ரெயில் வழித்தடமும் பரங்கிமலையில் சந்திக்கிறது. இதனால் சாலை, ரெயில், மெட்ரோ ரெயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக பரங்கிமலை அமைய உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரம் பயணிகள் பரங்கிமலை ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும்பணி ரூ.14.15 கோடி மதிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் நிலையத்தின் இருபுற வாயில்களும் விரிவாக்கப்படுகின்றன.மேலும், புதிய பயணச்சீட்டு மையம், நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்கை, கூடுதல் வாகன நிறுத்தும் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் எண்ம (டிஜிட்டல்) பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துக்குள் முழுப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.