வாய்ச்சொல் வீரர் சீமான் - அமைச்சர் சேகர் பாபு
|லட்சங்களை கொண்ட கரம் சிலையை உடைத்தால் கோடிக்கு மேலான கரங்கள் எப்படி வேடிக்கை பார்க்கும் என்று அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் கருணாநிதி சிலை, பேனா சிலையை உடைப்போம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு,
கருணாநிதி, உடன் பிறப்பு என்ற ஒரு வார்த்தையால் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கும் மேல் உள்ளது. ஒரு சில லட்சங்களை கொண்ட இவருடைய கரங்கள் சிலைகளை உடைக்க முற்படுமானால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
சீமான் வாய்க்கு வந்ததை பேசுவதில் பலனில்லை; தேர்தல் களத்தில் நிரூபிக்க வேண்டும். சீமான் வாய்ச்சொல் வீரர், சீண்டல் என்பது வார்த்தையில் அல்ல, பிரயோகத்தில் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட பகை வந்தாலும், அதை தோற்கடிக்கின்ற வல்லமை பொருந்திய படை தான் திராவிட மாடல் படை.
யானை மிதித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிச்சயம் உதவி செய்யப்படும். தகுதி இருந்தால் யானை மிதித்து இறந்த சிசுபாலன் மனைவிக்கு அறநிலையத் துறையில் வேலை வழங்க பரீசிலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.