ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
|விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் முத்து. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (வயது 40). இவர்களுடைய மகள்கள் கலைவாணி (22), சுவேதா (19). மகன் திவாகர் (17). கும்மிடிப்பூண்டியில் உள்ள கவிதாவின் உறவினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இறந்து போனார். இதற்கான காரியம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக கவிதா நேற்று காலை வெங்கல் பஸ் நிறுத்தத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் அரசு பஸ்சில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பக்க இருக்கை காலியாக இருந்தது எனவே, முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள ஓடும் பஸ்சில் கவிதா எழுந்து நடந்து சென்றார். அப்போது பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதா நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் ரமேஷ் (34)என்பவரை கைது செய்தனர். பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.