< Back
மாநில செய்திகள்
பாசிச எதிர்ப்பை விஜய் நையாண்டி செய்வதா? - திருமாவளவன்
மாநில செய்திகள்

பாசிச எதிர்ப்பை விஜய் நையாண்டி செய்வதா? - திருமாவளவன்

தினத்தந்தி
|
28 Oct 2024 7:59 PM IST

திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், 'பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்' என்று தெரிவித்தார்.

மேலும் இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாக யார் அரசியலுக்கு வந்தாலும், ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, இவர்கள் மட்டும் மறைமுகமாக டீலிங் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை பயத்தை காட்டி ஒரு சீன் போடுவதே வேலையாக போய்விட்டது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?. நீங்களும், அவர்களுக்கு சரிசமம் தான். மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று விஜய் கூறினார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-

முதல் அடி மாநாடு, அடுத்த அடி ஆட்சிப் பீடம்' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.

திரையுலகத்தில் பெற்றுள்ள புகழ், செல்வாக்கு, அரசியல் உலகத்திற்கு வரும்போது பரிமாற்றம் பெறும் என சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சூழலில் அது வாய்ப்பில்லை. ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அரசியலில் வேகமாக இலக்கை அடையலாம், ஆனால் படிப்படியாகத்தான் உயர முடியும்.

பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ "அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்; "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது.

தவெக கொள்கையில் ஆக்கப்பூர்வமான, புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ, புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.

பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி விஜய்யிடம் வெளிப்பட்டுள்ளது. ஆபர்என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத்தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம்.

'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான 'பிளவுவாதத்தை' ஏற்பதில்லை என்ற விஜய் கூறுகிறார். சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் மதவழி சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா?. திமுகவை முதல் எதிரி என்று கூறியிருப்பதும், திமுக கூட்டணியை குறிவைத்திருப்பது தான் விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாராம்சமாக உள்ளது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முடியுமா என்று தூண்டிலை போட்டுள்ளதாக பலரும் அலசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியை பொறுத்தவரையில் வலுவாக இருக்கிறது; வலுவாக தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்