< Back
மாநில செய்திகள்
கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் திரும்ப வழங்கப்படுமா..? - அமைச்சர் சேகர் பாபு பதில்
மாநில செய்திகள்

கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் திரும்ப வழங்கப்படுமா..? - அமைச்சர் சேகர் பாபு பதில்

தினத்தந்தி
|
21 Dec 2024 11:39 AM IST

கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன்' தினேஷ் என்பவர் தவறி போட்டுள்ளார்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் அறுபடை வீடுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய முருகப் பெருமானுக்கு பல்வேறு காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன் 13புரோ' ரக மொபைல் போனையும் தவறி போட்டுள்ளார். அதன்பின் கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல் போனை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கோவில் நிர்வாகத்தினர் உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் இருந்து ஐபோன் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தினேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார். அப்போது அவர் தனது மொபைல் போனை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தமாவது. மொபைல் போனை தர முடியாது', வேண்டுமென்றால், மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

அதற்கு தினேஷ், தன்னிடம் தரவுகளை பெற லேப்டாப் உள்ளிட்டவை இல்லை. ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக தெரிவித்தார். பின்னர் அந்த ஐபோன் கோவில் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் திரும்ப வழங்கப்படுமா என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "அறநிலையத்துறை விதிகளை ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்