ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியா? அமைச்சர் முத்துசாமி பதில்
|முதல்-அமைச்சர் பொதுமக்களின் தேவைக்காக மட்டுமே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
ஈரோடு,
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக வினரின் விருப்பத்தை தலைமைக்கு தெரிவிப்போம். ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற உணர்வு இருக்கும். அது அவர்களின் உரிமை. இதில் திமுக, காங்கிரஸ் என பிரித்து பார்க்காமல் கூட்டணியில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதன்படி செயல்படுவோம்.
ஈரோடு கள ஆய்விற்கு பின்னர் 200 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் பொதுமக்கள் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பை வைத்து தான் கூறி உள்ளார். முதல்-அமைச்சர் பொதுமக்களின் தேவைக்காக மட்டுமே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வாக்குகளுக்காக அல்ல. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாரத்தில் நான்கு நாள்கள் மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்
எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என்று நினைப்பது தவறு. அவர் அப்படிதான் இருக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் உத்வேகமாக செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.