தி.மலை மகா தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா..? - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|தி.மலை தீபத்திருவிழா தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை,
திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் மலையின் உச்சியில் தீபம் எரியும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "பெஞ்சல் புயல் பாதிப்புக்குப் பின் திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மலை மீது ஏறி ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் தீபத் திருவிழாவை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாரம்பரியமாக நடைபெற்று வரும் தீப திருவிழா தடைபடாமல் நடைபெறும். இந்த ஆண்டும் மலையின் உச்சியில் தீபம் எரியும்.
திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்துவோம். 350 கிலோ கொப்பரை திரி, 450 கிலோ நெய் சுமக்க தேவையான அளவு மனிதசக்தியை பயன்படுத்தி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் தீபதிருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகா தீபத் திருவிழா நடைபெறும். மலையேறி சென்று தீபத்தை காண அனுமதிப்பது தொடர்பாக வல்லுநர் குழு ஆய்வறிக்கை கிடைத்தவுடன், முதல்-அமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் புவனகிரி தொகுதி வளையமாதேவி வேதநாராயண பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.