ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா? செல்வப்பெருந்தகை பதில்
|ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ம் தேதி காலமானார். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 -ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். பிப். 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்று செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.