அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்
|திமுக மக்கள் விரோத போக்கில் செயல்படுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக இன்று எதுவும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதனை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல.
ஒரு ஆட்சி சரியில்லை, கட்சி சரியில்லை என்றால்தான் விமர்சனம் வரும்; அதிமுக சரியாக இருப்பதால் தவெக தலைவர் விஜய் எங்களை (அதிமுக) விமர்சிக்கவில்லை. எங்களைப் பற்றி பேசவில்லை என்றால் ஒரு சிறப்பான ஆட்சி 31 ஆண்டு காலம் கொடுத்திருக்கிறோம். ஆகவே விமர்சிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை. 2026 ஆண்டு மக்கள் விரும்புகின்ற ஆட்சியைக் கொடுக்க வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது கட்சி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மாறி மாறி பாராட்டி கொள்கிறார்கள். ஒன்று அப்பா மகனை பாராட்டுவார்; அல்லது மகன் அப்பாவை பாராட்டுவார். இதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 2026-க்குப் பிறகு திமுக அழிந்துவிடும். 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தபிறகு அக்கட்சியில் பல பிரச்சினைகள் வெடிக்கும்.
திமுகவின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். விலைவாசியை கட்டுப்படுத்த, மக்கள் திட்டங்களில் அரசு கவனம் செலுத்துவதில்லை; அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியும், ஸ்டிக்கரும் ஒட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.