அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்
|30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய அதன் கட்சி தலைவர் விஜய், அ.தி.மு.க.வை விமர்சிக்காததற்கு காரணம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதுதான். எனவேதான் விஜய், அ.தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. அதற்காக மற்றவர்கள் ஆதங்கப்படுவது ஏன்? ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட குறிக்கோள் இருக்கும். அதனை முன்னிறுத்தியே கட்சி தலைவர்கள் பேசுவார்கள். இதில் மற்றவர்கள் ஆதங்கப்படக்கூடாது.
கடந்த காலங்களில் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமை பொறுப்பில் இருந்த போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்றுதான் தற்போதும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அவர்களுக்கு இனிவரும் காலத்தில் அ.தி.மு.க.வில் இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.