< Back
மாநில செய்திகள்
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்

தினத்தந்தி
|
6 Jan 2025 10:19 AM IST

அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். கூட்டத்தொடரை முன்னிட்டு, சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எனினும், சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அவையில் இருந்து கவர்னர் வெளியேறியது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என முதல்-அமைச்சர், சபாநாயகரிடம் கவர்னர் வலியுறுத்தினார். ஆனால், கவர்னர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால், தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு உள்ளது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது என்பது அரசமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் கடமையாகும். அதனை பாட மறுத்தது வருத்தத்திற்குரிய விசயம்.

இதனால், மிகுந்த வருத்தத்துடன் அவையில் இருந்து கவர்னர் வெளியேறினார். அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்