< Back
மாநில செய்திகள்
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கிறாரோ, அவரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்தட்டும்: மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கிறாரோ, அவரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்தட்டும்: மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
25 March 2025 12:21 PM IST

மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இருமொழி கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

விசிக உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் பேசுகையில், மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வது இந்தியைத்தான். அதனால் தான் தமிழ்நாடு அதை எதிர்கிறது. இந்தியை கொண்டு திணிப்பதிலும், சம்ஸ்கிருதத்தை கொண்டு திணிப்பதிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது என்று கூறினார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கமுடியும் என மத்திய அரசு கூறுவது அநீதியானது. இருமொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தருவோம் என மத்திய அரசு கூறுவது சர்வாதிகாரம். தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கூறினார்.

அதனை தொடர்ந்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், தாய் மொழியை விட உயர்ந்த கொள்கை எதுவும் இருக்க முடியாது. இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை என பாமக சார்பில் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்சினை அல்ல; இன பிரச்சினை. . தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது.

இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிழரை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3-வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது. மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. அப்படி யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்