'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
|தமிழ்நாடு முழுவதும் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் , அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters' என தெரிவிக்கப்பட்டுள்ளது.