< Back
மாநில செய்திகள்
எப்போது முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்..? - கூட்டுறவுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

எப்போது முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்..? - கூட்டுறவுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

தினத்தந்தி
|
31 Dec 2024 6:15 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வருகிற (ஜனவரி) 3-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும் டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றும், தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக விடுமுறை தினமான ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் இதற்கு மாற்றாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை கூறியுள்ளது.

மேலும் செய்திகள்