< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?  அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு தகவல்

தினத்தந்தி
|
31 Dec 2024 11:38 PM IST

கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர், -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பெருந்திட்டவளாக பணிகளில் 20 பணிகளை ஹெச்.சி.எல். நிறுவனம் செய்து வருகின்றது. அதில் மூன்று பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

அதேபோல் ராஜகோபுரம் பணி முடியும் தருவாயில் உள்ளது. வருகிற 20-ந் தேதி 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் படி பக்தர்கள் தங்க 122 அறைகள் கட்டப்பட உள்ளன. இதில் 56 பக்தர்கள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தோம். இந்தப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ளது.

மொத்தம் 43 பணிகள் என்றாலும் அவை ஒவ்வொன்றாக முடிந்ததும், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு திறப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கும்பாபி ஷேகம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் எடுத்துக்கொண்ட பணிகள் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும் செய்திகள்