< Back
மாநில செய்திகள்
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது? - மதுரை கோட்ட மேலாளர் தகவல்
மாநில செய்திகள்

பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது? - மதுரை கோட்ட மேலாளர் தகவல்

தினத்தந்தி
|
26 Dec 2024 8:12 AM IST

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன.

இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன. இதையடுத்து நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார்.

தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்